ஐபிஎல் கிரிக்கெட் - இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு-லக்னோ அணிகள் மோதல்

 
RCBvsLSG

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறவுள்ள லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கியது. இதுவரை 14 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 15வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியில் பாஃப் டூபிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூரு அணியை பொறுத்தவரையில் அந்த அணி இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. 

லக்னோ அணியை பொறுத்தவரையில் அந்த அணி கே.எல்.ராகுல் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் இடையிலான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.