வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை? - லக்னோ அணியுடன் இன்று மோதல்

 
csk

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதுவரை 5 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 6வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள 6வது லீக் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்ட சென்னை அணி கடைசி வரை போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதேபோல் முதல் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்திய லக்னோ அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று வெற்றி பயணத்தை தொடர முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாகும். ஏனென்றால் சென்னையில் நடைபெற்ற பெருமாலான ஆட்டங்களில் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது. 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் விளையாட இருக்கிறது. ரசிகர்களின் ஆரவாரமும், மெதுவான தன்மை கொண்ட ஆடுகளமும் சென்னை வீரர்களுக்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும் என்று நம்பலாம். இதனால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.