வெற்றி பாதைக்கு திரும்புமா சென்னை? - லக்னோ அணியுடன் இன்று மோதல்

 
csk

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகலில் நடைபெறவுள்ள லீக் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெறும் 45வது லீக் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.  சென்னை அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.  சென்னை அணி ஏற்கனவே நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

இதேபோல் லக்னோ அணியும் 9 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள நிலையில், 5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த நிலையில், இன்றைய போட்டியிலும் அவர் விளையாடுவாரா என்பது சந்தேகம் தான். இது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.  அவருக்கு பதிலாக குருணல் பாண்ட்யா அணியை வழிநடத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.