ஐபிஎல் கிரிக்கெட் - ராஜஸ்தானை பழிதீர்க்குமா சென்னை?

 
csk vs rr

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது சீசன் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் 37-வது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சென்னை அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள7 போட்டிகளில் 5 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.  

இதேபோல் ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில், இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4 வெற்றியும் (ஐதராபாத், டெல்லி, சென்னை, குஜராத் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியும் (பஞ்சாப், லக்னோ, பெங்களூரு அணிகளிடம்) கண்டுள்ளது. அந்த அணி தனது முந்தைய 2 லீக் ஆட்டங்களில் லக்னோ, பெங்களூரு அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்தது. ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் அணி முனைப்பு காட்டும். இதேபோல் முந்தைய போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க சென்னை அணி தீவிரம் காட்டி வருகிறது.