ஐபிஎல் கிரிக்கெட் - ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

 
RR

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லப்போகும் அணிகள் எது என்பது இதுவரை தெரியவில்லை. குஜராத் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ள நிலையில், அடுத்த மூன்று இடத்திற்கு கடும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இமாசலபிரதேசத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று இரவு நடைபெறும் 66-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில்  6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் எடுத்து 8-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய போட்டியில் டெல்லி அணியிடம் தோற்றதால் அந்த அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு முடிந்து போனது. 

இதேபோல்  ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.  கடந்த போட்டியில் 112 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் படு தோல்வி அடைந்தது. அந்த தோல்வி ராஜஸ்தான் அணியின் அடுத்த சுற்று முன்னேற்றத்திலும் சறுக்கலாக அமைந்தது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி கண்டாலும் பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது கடினம் தான். ஆகையால் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்யவே அந்த அணி முயற்சிக்கும்.