வினேஷின் தலை முடியை வெட்டிய பிறகும் எடை அதிகமாக இருந்தது- ஒலிம்பிக் குழு மருத்துவர்
சில நேரங்களில் போட்டிக்கு பிறகு அதிகரிக்கும் எடை, வழக்கத்தை விட வினேஷ் போகத்துக்கு அதிகமாக இருந்தது என இந்திய அணியில் தலைமை மருத்துவர் தின்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

29 வயதான ஹரியானாவைச்சேர்ந்த வினேஷ் போகத் இளம் வயதிலியே மல்யுத்தம் பயின்றார். தனது 19 வது வயதில் யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார். சீனியர் பிரிவில், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் என அனைத்து தொடர்களில் பதக்கங்களை வென்று, தனது இல்லத்தையே பதக்கங்களால் அலங்கரித்தார். இரண்டு ஒலிம்பிக்கில் தோல்வி கண்ட வினேஷ் போகத்திற்கு, பாரிஸ் ஒலிம்பிக்கில், முதல் சுற்றே கடும் சவாலாக இருந்தது. தொடக்க சுற்றில் 4 முறை உலக சாம்பியனும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பான் வீராங்கனையை சுசாகியை வீழ்த்தி அசத்தினார். காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையையும், அரையிறுதியில் கியூகா வீராங்கனையையும் தோற்கடித்து பதக்கத்தை உறுதி செய்த வினேஷ் போகத், ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், சுமார் கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததாகக் கூறி 'திடீர்' தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய ஒலிம்பிக் குழுவின் தலைமை மருத்துவர் தின்ஷா பெளடிவாலா, “சில நேரங்களில் போட்டிக்கு பிறகு அதிகரிக்கும் எடை, வழக்கத்தை விட வினேஷ் போகத்துக்கு அதிகமாக இருந்தது. வினேஷ் போகத் நேற்று தொடர்ந்து 3 போட்டிகளை விளையாடியிருக்கிறார். சில நேரங்களில் தொடர்ந்து விளையாடினால்கூட உடல் எடை கூடும். அரையிறுதிப் போட்டி முடிந்ததும், வினேஷின் எடை அதிகரித்திருந்தது. இரவு முழுவதும் எடையை குறைக்கும் பயிற்சியை அவர் மேற்கொண்டார். இருப்பினும் எடை 100 கிராம் அதிகமாக இருந்தது. ஆடையின் அளவை குறைத்தோம். தலை முடியைக்கூட வெட்டி விட்டோம். ஆனாலும் 50 கிலோவுக்கு எடையை கொண்டு வர முடியவில்லை” என்றார்.


