"உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினால் வேற லெவல் பரிசு" - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
கிரிக்கெட் ரசிகர்களுக்கு டபுள் டமாக்காவாக ஐபிஎல் முடிந்த இரு நாட்களில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரை ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் இந்தியா நடத்துகிறது. ஐபிஎல் தொடரில் இருந்த அதே மைதானங்களில் தான் டி20 உலகக்கோப்பையும் நடைபெறவிருக்கிறது. சர்வதேச தரவரிசைப் பட்டியலில் கடைசி 8 இடங்களில் இருக்கும் அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடவிருக்கின்றன. அக்டோபர் 17ஆம் தேதி இப்போட்டிகள் தொடங்குகின்றன. அதேபோல இதுமுடிந்த பின் சூப்பர் 12 சுற்று நடைபெறுகிறது.
இந்தியா முதல் போட்டிலியே பரம வைரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. துபாயில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி இப்போட்டி நடைபெறவிருக்கிறது. இதற்காக பாகிஸ்தான் வீரர்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். எப்படியாவது இந்தியாவை வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில் பாகிஸ்தான் வீரர்களும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் கங்கணம் கட்டி வருகின்றனர். ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை. பாகிஸ்தானே அதிக முறை தோற்றிருக்கிறது. உலகக்கோப்பை வெல்வதை விட இந்த மோசமான வரலாறை மாற்றியெழுத வேண்டும் என்பதே அவர்களின் உச்ச லட்சியம்.
அது ரமிஷ் ராஜாவின் பேச்சிலும் எதிரொலித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரக ரமிஷ் ராஜா அண்மையில் தான் நியமிக்கப்பட்டார். இவர் வந்த பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பதவியேற்கும் முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த இவர், அணியின் பயிற்சியாளர்களாக இருந்த மிஸ்பா உல் ஹக்கும், வக்கார் யுனிஸ்ஸும் ராஜினாமா செய்யவைத்தார் என்று சொல்லப்பட்டது. இச்சூழலில் இவர் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்திவிட்டால் பெரிய தொகை பரிசாக கிடைக்கும் என சொல்லியிருக்கிறார். தொகை நிரப்பப்படாத காசோலை (Blank Cheque) கிடைக்கும் என்று வீரர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.