ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் - ரசிகர்கள் உற்சாகம்!

 
RR

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகளும், இரண்டாவது போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில்  குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. இதனையடுத்து நேற்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய நிலையில், அதில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இரவு நடைபெற்ற மற்றொரு போட்டியில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் மோதிய நிலையில், லக்னோ அணி வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்த் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.