உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - இந்திய அணி தடுமாற்றம்

 
ind

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் தடுமாறி வருகிறது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. இந்த நிலையில், இரண்டாவது நாள் பாதியில் அந்த அணி 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர்.  
 
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறியது. கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களிலும், கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  விராட் கோலி 14 ரன்களும், புஜாரா 14 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், அடுத்து களமிறங்கிய ஜடேஜா மற்றும் ரஹானே இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.  ஜடேஜா 48 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத் தொடர்ந்து இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்துள்ளது. ரஹானே 29 ரன்களுடனும், பரத் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.