மாற்றுக் கட்சியினரும் தவிர்க்க முடியாத ராஜதந்திரியை இந்தியா இழந்திருக்கிறது – ஸ்டாலின்

 

மாற்றுக் கட்சியினரும் தவிர்க்க முடியாத ராஜதந்திரியை இந்தியா இழந்திருக்கிறது – ஸ்டாலின்

மூளை அறுவை சிகிச்சை, கொரோனா தொற்று, சிறுநீரக செயலிழப்பு, நுரையீரல் தொற்று, செப்டிக் ஷாக் எனப்படும் தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு கோமா நிலையிலிருந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று காலமானார். அவருக்கு வயது 84. பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர், ‘பாரத ரத்னா’ திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். “மீண்டு வந்து விடுவார்”, “இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் வென்று காட்டுவார்” என்று என்று நாடே ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் – இந்த வேதனை மிகுந்த மறைவுச் செய்தி என் அடிமனதை உலுக்கி எடுக்கிறது. அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றுக் கட்சியினரும் தவிர்க்க முடியாத ராஜதந்திரியை இந்தியா இழந்திருக்கிறது – ஸ்டாலின்

திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ‘மிராட்டி’ என்ற ஒரு குக்கிராமத்தில் உள்ள மண் வீட்டிலிருந்து, ‘குடியரசுத் தலைவர் மாளிகை’ என்ற சிகரத்தைத் தனது திறமையாலும் கடினமான உழைப்பாலும் எட்டியவர். இளம் வயதிலேயே வீட்டில் காங்கிரஸ் கொடியேற்றியது – சீனப் போர்க் காலத்தில் ரத்த தான முகாம்கள் நடத்தியது – சட்டக் கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டது எனப் பொதுவாழ்வின் அழியாத சுவடுகள் நிறைந்த பொழிவு மிக்க அவரது பயணம் – 1960-களில் முதன்முதலில் தீவிர அரசியலுக்கு அவரைக் கொண்டு வந்து சேர்த்தது. அவர் காங்கிரஸ் பேரியக்கத்தில் ஒரு நூற்றாண்டு காலமாகத் தொடர்புடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்!

முதன்முறையாக மாநிலங்களவைக்குத் தேர்வு பெற்று – ஐந்து முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை மக்களவை உறுப்பினராகவும் இந்திய நாடாளுமன்றத்தை அலங்கரித்த மூத்த உறுப்பினர்களில் ஒருவர். திறமையான நாடாளுமன்ற விவாதத்திற்கும் – அற்புதமான உரைகளுக்கும் புகழ் பெற்றவர்.

வெளியுறவு, இராணுவம், வர்த்தகம், நிதி உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சர் பதவிகளில் சிறப்பாகப் பணியாற்றி – அவரது காலக்கட்டத்தில் இருந்த பிரதமர்களுக்கு ‘கண்ணும் செவியுமாக’ச் செயல்பட்டவர். மத்திய திட்டக் கமிஷனின் துணைத் தலைவராகப் பணியாற்றி தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டிய தீர்க்கதரிசி!

மாற்றுக் கட்சியினரும் தவிர்க்க முடியாத ராஜதந்திரியை இந்தியா இழந்திருக்கிறது – ஸ்டாலின்

‘ஈடு இணையற்ற நிர்வாக ஆற்றலும்’ ‘எத்தகைய சிக்கல்களையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கும் திறமையும்’ படைத்த அவர், தேசியப் பிரச்சினைகளில் தெளிவான சிந்தனை கொண்டவர். ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கும் ஆற்றல் மிகுந்த – அசாத்திய துணிச்சலைத் தன்னகத்தே கொண்ட முதுபெரும் அரசியல் தலைவர். அவர் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக – இந்த நாட்டின் முதல் குடிமகனாக இருந்து ஐந்து ஆண்டு நம்மையெல்லாம் வழி நடத்தியது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை!

திராவிட முன்னேற்றக் கழகத்துடனும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடனும் நீண்ட நெடுங்காலமாகவே நெருங்கிய தொடர்பு கொண்ட அவர், கழகத்தின் மாநில சுயாட்சிக் கருத்தரங்கில் பங்கேற்று மாநில உரிமைகளுக்கு மதிப்பளித்து உரையாற்றியவர். தமிழகத்தின் வளர்ச்சி மீது அக்கறை காட்டிய அவர், நிதியமைச்சராக இருந்தபோது கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி காலாவதியான நிலையிலும் – நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று – அந்த நிதியை ஒதுக்கி – சென்னை மக்களின் குடிநீர் தாகத்தைத் தீர்க்க மனப்பூர்வமாக ஒத்துழைத்தவர். அப்படிப்பட்ட தனது ஆரம்ப கால நண்பரான திரு. பிரணாப் முகர்ஜி அவர்களைக் குடியரசுத் தலைவராக்க – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முன்னணியில் நின்று ஆதரித்தார்.

“என் 50 ஆண்டுக்கால நண்பர் கலைஞர். நவீன இந்தியாவை உருவாக்கிய முக்கியத் தலைவர். இந்தியாவின் வளர்ச்சியிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை கொண்டவர்” என்று சமீபத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் 2-வது ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ரவீந்திரன் அவர்கள் கூட்டிய காணொலிக் காட்சியில் பங்கேற்று திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் ஆற்றிய உரை இப்போதும் – எப்போதும் என் நினைவில் நிற்கும் பொன் வரிகள். தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்தவுடன் வர இயலவில்லை என்பதால் – பிறகு கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த அவர், “நாடு சிறந்த மாபெரும் தலைவரை இழந்து விட்டது” என்று முத்தமிழறிஞர் கலைஞர் பற்றி அவர் சூட்டிய புகழாரம் கழக வரலாற்றில் – சொக்கத் தங்கம் போல் ஜொலித்திடும் வரிகள்!

மாற்றுக் கட்சியினரும் தவிர்க்க முடியாத ராஜதந்திரியை இந்தியா இழந்திருக்கிறது – ஸ்டாலின்

தேசிய அரசியலில் மாற்றுக் கட்சியினரும் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் தலைவரை – இராஜதந்திரியை இந்தியா இழந்திருக்கிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதச்சார்பின்மை – ஜனநாயகம் ஆகியவற்றின் அசைக்க முடியாத பாதுகாவலராக இறுதிவரை விளங்கிய நாடு போற்றும் தலைவரின் மறைவு – அந்தக் கொள்கைகளுக்காகப் போராடி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் இந்த நேரத்தில் பேரிழப்பு!

அவர் எழுதி வெளியாகியுள்ள ‘The Dramatic Decade’ என்ற நூல் அரசியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு – கடந்தகால அரசியல் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு மிகப் பொருத்தமான வழிகாட்டும் கையேடாகும். சாதுர்யம் மிக்க – அனுபவச் சக்ரவர்த்தி ஒருவரை இந்த நாடு இழந்திருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் – காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் – ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.