மனுசன் என்ன ஸ்டைலா டீ போடுறான்யா!… ஸ்டைலுக்கு ரஜினி தான் காரணமாம்!
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூருக்குச் சென்றால் நீங்கள் நிச்சயமாக “டோலி கி தப்ரி” என்ற பேமஸான டீக்கடை குறித்து கேள்விப்படாமல் ஊர் திரும்பமாட்டீர்கள். அந்த அளவிற்கு அக்கடையில் கிடைக்கும் டீயின் சுவையும் மணமும் நம்மைச் சுண்டியிழுக்கும். தற்போது அந்த டீ உடன் தூக்கலாக ஸ்டைலையும் உள்ளே நுழைத்து வெளியூர்வாசிகளை ஸ்டைலாக வரவேற்கிறார் டீக்கடைக்காரர் டோலி.
கை நிறைய காப்புகள், கயிறுகள், தொங்கவிட்ட முடியில் பிங்க் கலர் டை என அட்டகாசமான ஸ்டைலுடன் இருக்கிறார் டோலி. அவர் பால் பாக்கெட்டிலிருந்து சட்டியில் பால் ஊற்றுவதிலிருந்து டீ கிளாஸை எடுப்பது, டீ போடுவது என வாடிக்கையாளர்கள் கைகளில் காசு வாங்குவது வரை ஸ்டைலாகவே செய்கிறார். அவர் பால் ஊற்றும் அந்த ஸ்டைல் தான் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.
நம்மூர் டீக்கடைக்காரர்கள் ஒரு சொட்டு பால் கூட கீழே விழக் கூடாது என்பதில் கவனத்துடன் சட்டியில் ஊற்றுவார்கள். ஆனால் நம்மாள் அப்படியே ஸ்டைலாக பாக்கெட்டை மேலே இழுத்து சட்டியில் அசால்ட்டாக ஒரு சொட்டு கூட வீணாகாமல் ஊற்றுகிறார். வாடிக்கையாளர்களிடம் கலகலப்பாகவும் இருக்கிறார் டோலி.
சரி இந்த ஸ்டைலுக்கு என்ன காரணம்? யார பாத்து இன்ஸ்பைர் ஆனீங்கனு கேட்டால் சற்றும் யோசிக்காமல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றார். நமக்கு அனைவருக்குமே தெரியும் சூப்பர்ஸ்டார் நின்றால், நடந்தால், வசனம் பேசினால் அத்துனையிலும் ஸ்டைல் என்ற வஸ்து கலந்திருக்கும். அதைப் பார்த்து வியந்துபோய் டோலியும் தான் செய்யும் ஒவ்வொன்றிலும் ஸ்டைலை கலந்திருக்கிறாராம். அதேபோல, காலையில் கடை திறக்கும்போது வரும் முதல் வாடிக்கையாளரிடம் காசு வாங்க மாட்டாராம். அவரை அப்பகுதி மக்கள் இந்தியாவின் ஜாக் ஸ்பேரோ என்று செல்லமாக அழைப்பார்களாம்.