கல்லூரிகளில் தேர்வெழுத தடுப்பூசி கட்டாயம் – தமிழிசை அதிரடி
கல்லூரிகளில் தேர்வு எழுத தடுப்பூசி அவசியம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதுச்சேரியிலும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுவை லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைக் கல்லூரியில் திறந்தவெளி வகுப்பறை தொடக்க விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை, திறந்தவெளி வகுப்பறையை தொடக்கிவைத்து மாணவர்களுடன் பேசினார்.
அப்போது, மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாணவர்களே பிரச்சாரம் செய்ய வேண்டும். நோயற்ற புதுச்சேரியை உருவாக்க வேண்டும். நோயிலிருந்து நம்மை பாதுகாக்க நிரந்தரத் தீர்வு தடுப்பூசி தான். தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்ற விவரத்தை சேகரித்து வருகிறோம். அறிவுரை வழங்கியும் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் தடுப்பூசி செலுத்தினால் தான் தேர்வேழுத முடியும், நுழைவுச் சீட்டு வாங்க முடியும் என உத்தரவிடப்படும் என்றார். மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துவது வருத்தமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.