போட்டோவையும் ரீல்ஸ் ஆக பதிவிடலாம் - இன்ஸ்டாவில் புதிய அப்டேட்

 
insta reels insta reels

விடியோவை போல போட்டோவையை ரீல்ஸ் ஆக தொகுத்து வெளியிடும் புதிய அப்டேட் இன்ஸ்டாகிராமில் வரவுள்ளது. 

புதிய பயனர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் பழைய பயனர்களை வெளியேறாமல் தக்கவைத்து கொள்வதற்காகவும் ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனமும் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்துகின்றன. அந்த அம்சங்கள் உங்களுக்கு மிகச்சிறிய அளவில் இருக்கலாம். ஆனால் பயனர்களின் மனநிலையைப் பொறுத்து அதன் முக்கியவத்துவம் மாறும். இந்தியாவில் ரீல்ஸ் எனப்படும் டப்ஸ் மேசில் பிரபலமடைந்த ஒரு செயலிதான் டிக் டாக். இது இந்தியாவில் பல மில்லியன் பயனர்களை கொண்டு இயங்கி வந்த நிலையில், இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மோஜ், டாக்கா டாக் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் டிக் டாக்கிற்கு மாற்றாக களமிறக்கப்பட்டன. 

reels

இதேபோல் இன்ஸ்டாகிராமும், தனது செயலியில் ரீல்ஸ் அம்சத்தை வழங்கியது. இது தற்போது பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ரீல்ஸ் சேவையில் புதிய அம்சத்தை கொண்டுவர இன்ஸ்டாகிராம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதாவது  இன்ஸ்டாகிராமில் இனி புகைப்படங்களை தொகுத்து அதற்கு பின்னணியில் பாடல்களை ஒலிக்கவிட்டு ரீல்ஸாக பதிவிடலாம். விரைவில் வர உள்ள புது அப்டேட்டின் மூலம் போட்டோக்களையும் வீடியோவாக எடிட் செய்து பதிவிடலாம். இதற்காக விதவிதமான டெம்ப்ளேட்களையும் அந்நிறுவனம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சோதனை அடிப்படையில் உள்ள இந்த புதிய அப்டேட் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.