முழு சங்கியாகவே மாறி காவி சாயத்தோடு உலா வருகிறார் பழனிசாமி - உதயநிதி ஸ்டாலின் சாடல்..!!

 
உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்

எடப்பாடி பழனிச்சாமி முழு சங்கியாகவே மாறி காவி சாயத்தோடு தமிழ்நாட்டில் உலா வருகிறார் என துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சித்துள்ளார்.  திமுகவின் திட்டங்களை கண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு எரிச்சலும் பதற்றமும் வருவதாகவும் சாடியுள்ளார்.  

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட மலப்பாம்பாடி கிராமத்தில்  வடக்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. வடக்கு மண்டல பொறுப்பாளரும் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான எ .வ.வேலு தலைமையில் நடைபெற்ற இந்த பாக முகவர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதல்வரும் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த 41 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 13,000 பாக முகவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு தமிழ்நாடு துணை முதல்வருக்கு ஆளுயர வெள்ளி செங்கோல் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து துணை முதல்வரின் இளைஞர் அறக்கட்டளைக்கு திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் 50 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

தொடர்ந்து பாக முகவர்களிடம் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு துணை முதல்வர், “அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் வீடு வீடாக கொண்டு சென்று வருகின்ற 8 மாதம் கடுமையாக பாக முகவர்கள் உழைக்க வேண்டும் . இந்தியாவில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் நம்பர் ஒன் மாநிலமாக திமுகவின் திராவிட மாடல் அரசு உள்ளது. 

மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழ்நாட்டில் விடியல் பயணத்தில் நான்காண்டுகளில் 730 கோடி மகளிர் பயணித்துள்ளதாகவும், புதுமைப்பெண் திட்டத்தில் 8 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளார்கள்; காலை உணவுத் திட்டத்தில் இது நாள் வரை 20 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.  
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் 1 கோடியே 15 லட்சம் பேர் கடந்த 22 மாதத்தில் மாதம் 1000 என பெற்றுள்ளார்கள். வருகின்ற சிறப்பு முகாமில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

பாசிச பாஜக அரசு தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியை புகுத்த முற்படுகிறார்கள் என்றும் . மக்களவைத் தொகுதிகளை குறைக்க முயற்சித்து வருகின்றனர்.   இதனை எல்லாம் தடுக்கும் வகையில் மக்களுக்காக தமிழ்நாடு முதல்வர் தொடர்ந்து போராடி வருகிறார்.  இந்தியாவில் எந்த கட்சியிலும் இல்லாத அளவிற்கு டிஜிட்டல் முறையை திமுக கொண்டு வந்து ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் கடந்த 10 நாட்களில் 91 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளார்கள். 

தமிழ்நாட்டில் உள்ள வடக்கு மண்டலத்தில் கடந்த 10 நாட்களில் 17 லட்சம் உறுப்பினர்கள் ஓரிணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக உள்ளார்கள்.  இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் 1 லட்சத்து 34 ஆயிரம் உறுப்பினர்கள் பெற்று ரிஷிவந்தியம் தொகுதி முதலிடத்தில் உள்ளது. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். 

உதயநிதி ஸ்டாலின்

பாசிச பாஜக மற்றும் அடிமை அதிமுக துரோகிகள் ஏன் தமிழ்நாட்டில் ஆட்சி செய்யக்கூடாது என்பதை வீடு வீடாக சென்று பாக முகவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்து கழகத்தில் அவர்களை இணைக்க வேண்டும்.  கடந்த சில நாட்களாகவே எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் பதற்றமாக உள்ளார். திமுக 4 ஆண்டுகளாக மக்களை சந்திக்காமல் தற்பொழுது வீடு வீடாக சென்று மக்களின் வீட்டு கதவை தட்டுவதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருக்கிறார்.  

நாங்கள் எடப்பாடி பழனிச்சாமி போன்று அமித்ஷா வீட்டு கதவையோ,  கமலாலையம் கதவையோ திருட்டுத்தனமாக தட்டவில்லை.  மக்களுக்கு செய்த திட்டத்தின் அடிப்படையிலேயே உரிமையோடு தைரியத்தோடு எங்கள் மக்களின் வீட்டு கதவை தட்டுகிறோம். திமுகவின் திட்டங்களை கண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு எரிச்சல் வருகிறது.  பாசிச பாஜகவிற்கும்,  அடிமை அதிமுகவிற்கும் இடையே ஒற்றுமையில்லாத நிலை தமிழ்நாட்டில் நிலவி வருவதாகவும் இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் இரு கட்சிகளாலும் டெபாசிட் கூட வாங்க முடியாது. 

அண்ணாவின் பேரில் கட்சி பெயர் வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அமிஷ்தாவிடம் அடமானம் வைக்க பார்க்கிறார். தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி முழு சங்கியாகவே மாறி காவி சாயத்தோடு தமிழ்நாட்டில் உலா வருகிறார். அடிமை  பாசிச பாஜகவினர தமிழ்நாட்டிலிருந்து விரட்டப் போவது உறுதி” என்றும் கூறினார்.