பெயரை சொல்லாத அமித்ஷா.. 2026ல் முதல்வர் வேட்பாளர் இவர்தான்..!! உண்மையை போட்டுடைத்த நயினார் ராகேந்திரன்..
உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது போல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “ தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும். எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும். அதில் பாஜக முக்கிய பங்கு வகிக்கும். தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிருகிறோம். முதல் அமைச்சர் அதிமுகவில் இருந்து வருவார். அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் யாரையும் நான் ஒன்றிணைக்கவில்லை. அது அவர்கள் கட்சி குறித்த விஷயம். அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும். என் நம்பிக்கை என்னவென்றால், அதிமுக மற்றும் பாஜக., அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவலான நிலையில் இருக்கிறது” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் 2026ல் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அரசு அமையும் என்றும், ஆட்சியில் பங்கு என்கிற வகையிலும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது அதிமுகவினர் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. காரணம் சில தினங்களுக்கு முன்னர் தான் எடப்பாடி பழனிசாமி, “2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றுதான் கூறினேன், ‘கூட்டணி அரசு’என கூறவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அந்த நிலையில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி அரசு அமையும் என அமித்ஷா பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அத்துடன், அதிமுகவில் இருந்து தான் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறிய அமித்ஷா, கூட்டணி ஆட்சி அமைந்தால் எடப்பாடி தான் முதல்வர் என்று உறுதியாக கூறவில்லை. அப்படியிருக்கையில் வேறு யாரையும் முதல்வர் வேட்பாளராக நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதா எனவும் அரசியல் வட்டாரத்தில் புகைச்சல் கிளம்பியிருக்கிறது.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியுன் பேசி முடிவெடுப்பார்கள், 2026 சட்ட சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். எங்கள் கூட்டணியை எந்தக்காலத்திலும் அவர்களால் பிளவுபடுத்த முடியாது.
பாஜக - அதிமுக கூட்டணியை அமித்ஷா அறிவித்ததில் இருந்ததே திமுகவினர் பயத்தில் என்னென்னவோ பேசி வருகின்றனர். கூட்டணி ஆட்சியை பொறுத்தவரையில் அமித்ஷாவும் இபிஎஸும் பேசிக் கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் என்.டி.ஏ கூட்டணியில் தவெக இணையுமா? என்ற கேள்விக்கு, நயினார் “நல்லதே நடக்கும்” என்று பதிலளித்தார்.


