யார் அந்த உண்மையான அப்பாடக்கர்?
பாஸ் என்கிற பாஸ்கரன் திரைபடத்தில் சந்தானம் பேசிய நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா ? என்ற வசனம் இளைஞர்கள் மத்தியில் வைரலானது. தற்போது நாம் கூட பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவது உண்டு… அப்பாடக்கர் காமெடிக்காக சொல்கின்ற வார்த்தையல்ல… அப்படி ஒருவர் உண்மையிலேயே வாழ்ந்துவந்தார் என்றால் நம்ப முடிகிறதா?
அமிர்தலல் விதல்தாஸ் தக்கர் (Amritlal Vithaldas Thakkar) என்பவர் மிக பெரிய சமூக சீர்திருத்தவாதி. குஜராத்தில் பிறந்த இவர் ஹரிஜன மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர். கடந்த 1969 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்காக தபால் தலையை வெளியிட்டது.
பல போராட்டங்களை சென்னையில் நடத்திய இவரை சென்னை மக்கள் செல்லமாக தக்கர் பாபா என்று அழைப்பர். தக்கர் பாபா மிகப்பெரிய அறிவாளி, பல துறைகளில் சிறந்து விளங்கியவர். எந்த துறையிலிருந்து கேள்விக்கேட்டாலும் சட்டென்று பதில் கூற கூடிய மேதையாகவே திகழ்ந்தார்.
நாளடைவில் சென்னை மக்கள் யாரையும் பெரிய அறிவாளியா என்று கேலியாக குறிப்பிட இவரது பெயரையே அடைமொழியாய் பயன்படுத்த தொடங்கினர். பின்னாளில் அப்பா தக்கர் என்ற வார்த்தை மருவி அப்பாடக்கர் ஆகிவிட்டது.
நீ என்ன பெரிய அப்பாடக்கரா? என்று இன்றும் அர்த்தம் புரியாமலேயே அமிர்தலல் விதல்தாஸ் தக்கருக்கு நாம் பெருமை சேர்த்துவருகிறோம்.