கத்திமுனையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை! கோவையில் பரபரப்பு
கோவையில் இருந்து கேரளாச் சென்ற தங்க நகை வியாபாரியின் காரை வழிமறித்து, கத்தி முனையில் 1.25 கிலோ தங்கக் கட்டிகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப் (55). ஜே.பி ஜுவல்லரி என்ற நகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜெய்சன் ஜேக்கப் கடந்த 12 ஆம் தேதி தனது கடை ஊழியரான விஷ்ணு என்பவரை காரில் அழைத்துக் கொண்டு கோவை வந்தார். பின்னர் கோவையில் இருந்து ரயில் மூலம் சென்னைச் சென்றுள்ளனர். தொடர்ந்து சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ள நகைக் கடையில் ஏற்கனவே அவர்கள் செய்திருந்த நகைகளை கொடுத்துவிட்டு, புதிய நகைகளை செய்ய 1.25 கிலோ தங்கக் கட்டிகளை வாங்கிக் கொண்டு மீண்டும் ரயில் மூலம் கோவை வந்தனர். தொடர்ந்து இன்று காலை ஜெய்சன் ஜேக்கப் மற்றும் விஷ்ணு இருவரும் காரில் கேரளாச் சென்றனர். அப்போது கார் க.க.சாவடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் அருகே வந்த போது திடிரென லாரியில் வந்த மர்ம கும்பல் காரின் மீது மோதி குறுக்கே நிறுத்தினர். பின்னர் 5 பேர் கொண்ட அந்த கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் காரின் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து உள்ளேச் சென்றனர்.
பின்னர் காரில் இருந்த 1.25 கிலோ தங்க கட்டிகளுடன் அங்கிருந்து இருவரையும் அழைத்துக் கொண்டுச் சென்ற மர்ம கும்பல் சிறிது தூரம் சென்று அங்கு ஜெய்சன் ஜேக்கப் மற்றும் விஷ்னுவை கிழே இறக்கி விட்டு, தங்க கட்டிகள் மற்றும் காருடன் அங்கிருந்து தப்பியது. இதையடுத்து ஜெய்சன் ஜேக்கப் உள்ளிட்ட இருவரும் கோவை க.க.சாவடி காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் 1.25 கிலோ தங்க கட்டிகளுடன் சென்ற மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகிறார்கள்., முன்னதாக கோவை பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பாலக்காடு சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர். இதே போல சம்பவம் தொடர்பாக கேரளா மாநில போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதால் மாநில எல்லைகளில் இரு மாநில போலீஸாரும் வாகன சோதனையில் ஈடுபட்டு கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்தியுள்ளனர்.


