மேலும் 1.8 லட்சம் மகளிருக்கு ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஏற்கனவே உள்ள சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பயனாளர்களுடன் புதிதாக இணைக்கப்பட்ட ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேருக்கும் சேர்த்து இன்று உரிமைத் தொகை வழங்கப்பட்டது.
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முதலில் ஒரு கோடி பேர் என இலக்கு நிர்ணயித்தாலும், அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிகளுக்குள் வரும் அனைவரையும் பயனாளர்களாக இணைக்க முடிவெடுக்கப்பட்டது. முதலில் ஒரு கோடியே 6 லட்சத்து 52ஆயிரம் பேர் மட்டுமே பயனாளர்களாக இருந்த நிலையில் அடுத்தடுத்து விண்ணப்பித்தவர்களும் பயனாளர்களாக இணைக்கப்பட்டு வருகின்றனர்.

நிராகரிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்ய வழிவகைகள் செய்யப்பட்டன. அடுத்தடுத்த மாதங்களில் பலரும் இணைக்கப்பட்டதால் பயனாளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சம் ஆனது. அதைத் தொடர்ந்தும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதால் இன்று முதல் மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கென 2023 - 2024ம் நிதியாண்டில் 8123.83 கோடி ரூபாயும், 2024-25ம் நிதியாண்டிற்கென 13 ஆயிரத்து 722.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


