10,000 கனஅடி நீர்திறப்பு.. கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. - பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

 
பூண்டி ஏரி

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.  இதன்காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான  செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 ஏரிகளில் இருந்தும் ஓரேநாளில் தலா 100 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டது.  தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

10,000 கனஅடி நீர்திறப்பு.. கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. - பொதுமக்களுக்கு எச்சரிக்கை.. 

இதனையடுத்து ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் மெல்ல மெல்ல உயர்த்தப்பட்டது.   இந்த நிலையில் பூண்டி ஏரியில் இருந்து  நீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனையொட்டி  கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் 60 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூண்டி நீர்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடியில் இருந்து தற்போது 34.43 அடிக்கு நீர்மட்டம் உள்ளது.