4 ஆண்டுகளில் 1.08 லட்சம் பேருக்கு அரசு வேலை - முதல்வர் ஸ்டாலின்..!!
கல்லூரியில் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் உதவிப் பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2,538 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்ட மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறேன். வளர்ச்சி விகிதம் 11.19% என மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீடு கூறுகிறது.
14 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் இறுதியாக இரட்டை இலக்கம் 11.15% ஆக இருந்தது. சாதாரணமாக இது நடந்துவிடவில்லை. நெருக்கடி, அவதூறுகளை கடந்து சாதித்திருக்கிறோம். இது எனக்கான தனிப்பட்ட வெற்றி மட்டுமில்லை. கூட்டாக பெற்ற வெற்றி. திராவிட மாடல் ஆட்சிக்கான நற்சான்றிதழ் பத்திரம்தான் இந்த பொருளாதார வளர்ச்சி. இதோடு ஓய்ந்துவிடாமல் வளர்ச்சியை திடாவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடருவோம்.

நேற்று இரவில் இருந்து இது தான் Talk of the Town and Talk of the Nation என்றே சொல்லலாம். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19% ஆக உயர்ந்துள்ளது. இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளது. திமுக ஆட்சியில் தான் தமிழகத்தின் பொருளாதாரம் அதிகரித்திருக்கிறது.
கல்வி கொடுத்தால் மட்டும் போதாது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்திலும் செயலாற்றி வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளில் TNPSC, TRB, MRB, TNUSRB உள்ளிட்ட தேர்வாணையங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் 1.08 லட்சம் பேருக்கு பணி நியமனங்களை வழங்கியுள்ளோம். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 3.28 லட்சம் பேருக்கும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகள் மூலம் 2.65 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். திராவிட மாடல் அரசு என்பது இளைஞர்களுக்கானது. கல்லூரியில் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.


