திருப்பூரில் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை! இன்ஸ்டா காதலே காரணம் என பெற்றோர் புகார்
தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பகுதியில் சேர்ந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு படிப்பில் கவனம் செலுத்தாமல் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்ததாகவும் மாணவியின் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மாணவி வீட்டில் செடிகளுக்கு பயன்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பள்ளி மாணவியின் தற்கொலைக்கு காரணம் மாணவியுடன் instagram மூலம் பழகி வந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர் என உயிரிழந்த பள்ளி மாணவி பெற்றோர்கள் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாணவியின் உயிரிழப்பிற்கு காரணமான கல்லூரி மாணவனை உடனடியாக கைது செய்யக்கோரி தாராபுரம்-பழனி சாலை அலங்கியம் அருகே 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து சாலை மறியலை கைவிட்டு மாணவியின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.


