"உதயமாகும் நட்சத்திரம்" உதயநிதிக்கு ஆஸ்கர் விருது... ஆனா இது நடிப்புக்கு இல்லையாம் - குஷியில் உபிக்கள்!

 
உதயநிதி

நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உலகளாவிய சமூக ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது திரைத்துறையில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருது அல்ல. அதற்கும் தற்போது இவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஆஸ்கருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சமூக ஆஸ்கர் விருது அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை வழங்கக் கூடிய ஒன்று. 

Udhayanidhi Stalin : அமைச்சர் பதவியா?... உதயநிதி ஸ்டாலின் பேட்டி

கடந்த 10 வருடங்களாகவே இந்த விருதுகள் அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் வழங்கப்பட்டு வருகிறது. உலகளவில் மக்கள் சமூகத்தை மேம்படுத்துவதில் மகத்தான சாதனைகள் செய்து, அவர்கள் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களைக் கௌரவிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்படுகிறது. பல்வேறு உலக இன ஆலோசனை பணிக்குழுவும் அமெரிக்க பணிக்குழுவும் இணைந்து விருதுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்கிறது. அந்த வகையில் தற்போது 11ஆம் உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது பெறுபவர்களின் பட்டியலை பிரதிநிதிகள் சபை உறுப்பினர் டேனி கே டெவிஸ் வெளியிட்டுள்ளார்.

மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஜோதிகா - இயக்குநர் யார் தெரியுமா? 

அதன்படி ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு 2021ஆம் ஆண்டின் சிறப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை கதையை கருவாகக் கொண்டு சமூக நீதியை முன்னிறுத்தி வெளியிடப்பட்டதற்காக இந்த விருது வழங்கப்படவுள்ளதாக டேவிஸ் கூறினார்.  உண்மை கதையின் நாயகன் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, சூர்யா, ஜோதிகா, இயக்குநர் த.செ.ஞானவேல் மற்றும் இதர ஜெய் பீம் படக்குழுவினர் நேரடியாக வந்து விருதுகளை பெற்றுச் செல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளார். 

அதேபோல திமுக இளைஞரணிச் செயலரும் எம்எல்ஏவும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு 2021ஆம் ஆண்டுக்கான சர்வதேச அளவில் வளரும் நட்சத்திரம் என்ற பிரிவில் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சிறந்த மக்கள் பணி செய்து வளர்ந்து வரும் தலைவர்களை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருது சிறந்த நடிப்புக்கு வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா வந்து விருதை வாங்கிச் செல்லுமாறு தனிப்பட்ட முறையில் உதயநிதிக்கு டேவிஸ் அழைப்பு விடுத்துள்ளார். சமூக ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 19ஆம் தேதி அன்று இலினொய் மாகாணத்திலுள்ள நேபர்வில்லேயில் நடைபெற உள்ளது.