"வெற்றி வாய்ப்பை தவற விட்டவர்கள் மீண்டும் முயற்சித்து வெற்றி பெறவேண்டும்" - தினகரன், சசிகலா வாழ்த்து

 
ttn

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி வெளியிட்டார். அந்த வகையில் தேர்வு எழுதிய 8.17 லட்சம் பேர் பேரில், 7,55,451 பேர் தேர்வு பெற்று,  94.03 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,05,753 மாணவிகள்,  மாணவர்கள் 3,49,697 பேர் அடங்குவர்.  மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.38, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.45 ஆகும்.

tn

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள் அதற்காக மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த வாய்ப்புகளில் வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது.


மாணவச்செல்வங்கள் அனைவரது எதிர்காலமும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.



அதேபோல் சசிகலா , "12-ஆம் வகுப்பு பொதுதேர்வில், தேர்ச்சிபெற்ற மாணவச் செல்வங்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். மேலும்,தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ள மாணவிகள் நந்தினி மற்றும் லக்ஷ்ய ஸ்ரீ  ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். மேலும், இத்தேர்வில் தற்சமயம் வெற்றி வாய்ப்பை தவற விட்டவர்கள், அதைப்பற்றி கவலை படாமல், எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்துவிட்டு, தன்னம்பிக்கையோடும், தைரியமாகவும் இருந்து மீண்டும் முயற்சித்து வெற்றி பெறவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.உங்களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், உற்ற நண்பர்களோடு அமர்ந்து பேசுங்கள், அடுத்து என்ன செய்யலாம் என்று பொறுமையோடு ஆராய்ந்து, விரும்பிய மேற்படிப்புகளை தேர்ந்தெடுத்து அதிலும் வெற்றி பெற்று, உங்கள் எண்ணம்போல் வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.