உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பிளஸ் 2 மாணவன் மயங்கி விழுந்து பலி
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏர்வாடியைச் சேர்ந்த முகம்மது பாகிம் (17) என்ற மாணவன், ஏர்வாடியில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்றிரவு இவர் ஏர்வாடி தைக்காவில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் (ஜிம்) பயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மாணவன் முகம்மது பாகிம் பரிதாபமாக உயிரிழந்தார். உடற்பயிற்சியின்போது ஏற்பட்ட திடீர் மயக்கத்தால் மாணவன் மரணமடைந்த இச்சம்பவம் ஏர்வாடி கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறு வயதிலேயே உடற்பயிற்சியின்போது பள்ளி மாணவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


