இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வன்முறை - 127 பேர் பலி

 
Indonesia

இந்தோனேசியா நாட்டில் கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர். 

இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்றிரவு கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அப்பகுதியை சேர்ந்த அணியான அரேமா, பெர்செபயா சுரபயா அணியுடன் மோதியது. இந்த போட்டியில் அரேமா அணி  2-3 என்ற கோல் கணக்கில் பெர்செபயா சுரபயா அணியிடம் தோல்வி அடைந்தது. சொந்த மண்ணில் தங்களது அணி தோல்வி அடைந்ததால் ஆத்திரமடைந்த அரேமா அணியின் ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து வீரர்களை தாக்கினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அந்நாட்டு போலீசார் மைதானத்தை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் சிக்கிக்கொண்ட நிலையில்,  அதில் பலர் நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Indonesia

படுகாயம் அடைந்த 180 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 போலீசார் உட்பட 34 பேர் மைதானத்திலேயே உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.