செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த தாய் - விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட மாணவி

 
death

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மணமுடைந்த 12ம் வகுப்பு மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தேத்தாகுடி பகுதியை சேர்ந்த வாசுகிக்கு 2 ஆண் மற்றும் 2 பெண் என மொத்தம் 4 பிள்ளைகள் இருந்தனர். கணவர் இறந்து 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், வாசுகி கூலி வேலைக்குச் சென்று தனது பிள்ளைகளை வளர்த்து வருகிறார். இவருடைய 17 வயது இளைய மகள் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறை தினமான நேற்று அந்த மாணவி வீட்டில் அதிக நேரம் செல்போன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் அதனை பார்த்த வாசுகி மகளை கண்டித்ததோடு, செல்போனை வாங்கிக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. 

இதனால் மனவேதனை அடைந்த அந்த மாணவி தாய் வழக்கம் போல் கூலி வேலைக்கு சென்றதும் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி விஷமருந்திய அந்த மாணவி மயங்கி கீழே விழுந்து கிடந்த நிலையில், இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மாணவியை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட தாய் மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.