ரெய்டில் சிக்கிய 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி.. சேலத்தில் பரபரப்பு..

 
சேலத்தில் 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

சேலம் மாவட்டத்தில் அசைவ உணவகங்களில்  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

கேரளாவில் கடந்த 2 ஆம் தேதி ஷவர்மா சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் உணவகங்கள், ஷவர்மா கடைகளை உணவு  பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆங்காங்கே கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.   அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அசைவ உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தது. அதன்பேரில் மாவட்ட   உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழு 4 பிரிவுகலாக பிரிந்து  திடீர் சோதனை நடந்தினர்.  

சேலத்தில் 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

சேலம் மாநகர் மற்றும், அயோத்தியாப்பட்டணம், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, ஓமலுார், பெத்தநாயக்கன்பாளையம், பனைமரத்துப்பட்டி, இடைப்பாடி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 19 உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தவகையில் கோழிக்கறி,  ஆட்டுக்கறி, மீன் , நண்டு என மொத்தம் 133. 8 கிலோ கெட்டுப்போன  இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் ரூ. 34,650 மதிப்புள்ள அந்த இறைச்சி முழுவதும் அழிக்கப்பட்டன.  அதில் 8 கடைகளுக்கு  மொத்தம் 13, 000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலத்தில் 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

இவைதவிர, மேலும்  22 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும்,   அதன்மீது  சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் சிக்கிய 19 உணவகங்களும் தொடந்து கண்காணிக்கப்படும் எனவும், மீண்டும் இதுபோன்ற கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்தப்படுவது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.  இனி அனைத்து உணவகங்களிலும் அடிக்கடி சோதனை  மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.