அதிகரிக்கும் டெங்கு - 15 நாட்களில் மட்டும் 136 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி
கொசுக்களால் பரவும் மிக வேகமாக பரவும் நோய்களில் ஒன்றானது டெங்கு. ஏடிஸ் எனப்படும் கொசுவினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. பருவமழை மற்றும் பருவமழைக்கு பிந்தைய காலங்களில், கொசுக்களின் பெருக்கம் காரணமாக பரவும் அபாயம் அதிகரிக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மே மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 136 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தேனி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் ஜனவரி முதல் தற்போது வரை சுமார் 4,000 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் 8,953 டெங்கு காய்ச்சல் பதிவான நிலையில் அதனால் 10 பேர் உயிரிழந்தனர். வழக்கமாக கோடையில் டெங்கு பாதிப்பு குறைந்து மழை காலங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும். கடந்த ஆண்டு இதே மாதம் 300-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.


