1,600 கோடி யூசர் ஐடி, பாஸ்வேர்டுகள் திருட்டு.. இணைய வரலாற்றில் இதுவரை இல்லாத முதல் நிகழ்வு.. பயனர்கள் அதிர்ச்சி..
உலகம் முழுவதும் 1,600 கோடி பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய இணைய உலகில் பயனர்களால் பதிவு செய்யப்படும் பாஸ்வேர்டுகள் எங்காவது கசிவது, ஹேக்கர்களால் திருடப்படுவது போன்றவை நிகழும். அவ்வப்போது ஏதாவது ஒன்றிரண்டு குறிப்பிட்ட இணையதளங்களின் தரவுகள் கசிந்திருக்கின்றன. அதனை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சரிசெய்வதுண்டு. அந்தவகையில் அண்மையில் கூட 184 மில்லியன் ஆப்பிள் பயனர்களின் தரவுகள் இணையத்தில் பாதுகாப்பிலாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து தங்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அந்நிறுவனமும் தெரிவித்திருந்தது. இவையெல்லாம் வெறும் ஆரம்பம் தான் என்பது போல, மிகப்பெரிய அளவிலான இணைய திருட்டு அரங்கேறியுள்ளது.

இந்த நிலையில் இணைய வரலாற்றில் இதுவரை காணாத நிகழ்வாக, முதன்முறையாக 1,600 கோடி ( 16 பில்லியன்) பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளன. லாகின் மற்றும் பாஸ்வேர்டுகள் கசிந்ததால் ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட பயனாளர்களின் கணக்குகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைக்கொண்டு மோசடி, இணையவழி திருட்டு முதலான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடவுச்சொற்களை திருடி அவற்றை ஹேக்கர்களிடம் கொடுத்து விட்டாலோ அல்லது டார்க் வெப் எனப்படும் தளங்களில் விற்று தவறான செயலுக்கு பயன்படுத்தப்பட்டு விட்டாலோ பெரும் ஆபத்துக்களை இது விளைவிக்கும். அதுவும் இ-மெயில், கூகுள், முகநூல், டெலிகிராம் முதல் அரசு இணையதளங்களின் பாஸ்வேர்டுகள் வரை திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சைபர் நியூஸ் அறிக்கையின்படி, 30 வெவ்வேறு தரவு தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவை ஒவ்வொன்றிலும் கோடிக்கணக்கான பயனர்களின் தரவுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இன்ஃபோ ஸ்டீலர்( infostealer malware) மென்பொருளை பயன்படுத்தி இந்த தரவுகளை திருடியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு தரவுகளின் பதிவும் இணையதள பக்கத்தின் URL லிங்க், பயனர் பெயர்(User name), பாஸ்வேர்டு ( password)என ஹேக்கர்கள் மிக எளிதாக அவற்றை பயன்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
பொதுவாகவே மின்னஞ்சல், கூகுள் மற்றும் பேஸ்புக், இண்டகிராம், எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதலங்கள், வங்கிச் செயலிகள், அரசின் அதிகாரப்பூர்வ சேவை தளங்கள் என பெரும்பாலும் அனைத்து இணைய பயன்பாடுகளுக்கும் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு முறையிலேயே லாகின் (Log in) செய்ய முடியும். இத்தகைய சூழலில் தற்போது அரங்கேறியுள்ள இந்த சைபர் திருட்டு, ஒட்டுமொத்த இணைய பயனாளர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.


