அ.தி.மு.க. பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயக்குமார், பொதுக்குழுவில் 16 தீர்மானங்களை வாசித்தார்.
தீர்மானங்கள்:
1. ஒத்த கருத்துடைய கட்சிகள் கால சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணைந்து, தி.மு.க.வை வீழ்த்துவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததற்கு பொதுக்குழு ஒப்புதல்.
2. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு, 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' தலைமை தாங்குகிறது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி கே. பழனிசாமிக்கு, இப்பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது.
3. கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதகை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்களோடு அனுப்பாத தி.மு.க. அரசுக்கு கண்டனம்.
4. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழையின் போது, கனமழை, வெள்ளம், புயல் காற்றும் போன்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்க தி.மு.க. அரசு தோல்வி அடைந்து வருகிறது.
5. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை அ.தி.மு.க. வரவேற்கிறது.
6. நெல்லின் ஈரப் பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கு, மத்திய அரசின் ஆணையைப் பெற தி.மு.க. அரசை பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
7. அந்நிய முதலீடுகள் குறித்து தவறான புள்ளி விவரங்களை அளிக்கும் முதல்வருக்கு கண்டனம்.
8. தமிழகத்தில் நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம்பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கிய முதல்வரின் நிர்வாகத் திறனற்ற போக்குக்கு கண்டனம்.
9. படுபாதாளத்திற்குச் செல்லும் தமிழ் நாட்டின் நிதி நிலைமை. கடன் தொகையில் மூலதனச் செலவு செய்யாமல், தமிழக மக்களைத் தொடர்ந்து கடனாளிகளாக்கும் தமிழக அரசுக்கு கண்டனம்.
10. சட்டம்-ஒழுங்கு சரிந்து கிடக்கிறது. தொடரும் கொலைகள் கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் புழக்கம், கூலிப் படையை ஏவிவிட்டு கொலை, கடத்தல், வழிப்பறி, காவல் துறையினர் முதல் வழக்கறிஞர்கள், பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகள் வரை பாதுகாப்பற்ற நிலையில் தமிழகத்தை வைத்திருப்பதற்கு கண்டனம்.
11. 2021-ல் 525 தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அளித்தது. வற்றில் மிகக் குறைவான வாக்குறுதிகளை மட்டுமே அறைகுறையாக நிறைவேற்றிவிட்டு, நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக்குதல், டீசல், பெட்ரோல் விலை குறைப்பு, சமையல் கேஸ் சிலிண்டர் மானியமாக ரூ. 100 வழங்குதல் போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு, எதையும் நிறைவேற்றாமல் இருப்பதற்கு கண்டனம்.
12. ஊழல் சாம்ராஜ்யமாக திகழும் அரசுக்கு கடும் கண்டனம்.
13. பட்டியலினத்தை இழிவு செய்தும், ஒடுக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதும், தி.மு.க. ஆட்சியில் நடந்துகொண்டிருப்பதற்கு கடும் கண்டனம்.
14. தென்னக நதிகளின் இணைப்பை நிறைவேற்ற தவறிய தி.மு.க.வுக்கு கண்டனம்.
15. நீதித் துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
16. எடப்பாடி கே. பழனிசாமியை 2026-ல் மீண்டும் முதலமைச்சராக்குவோம் என சூளுரை ஏற்போம்.
பின்னர், இந்த தீர்மானங்கள் அனைத்தும் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு அ.தி.மு.க. பொதுக்குழுவில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


