கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 7 கல்லூரி மாணவர்கள் கைது
கோவையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் குனியமுத்தூர், கோவைப்புதூர், ஈச்சனாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இதில் மூன்று தனியார் கல்லூரிகளில் படிக்கும் 7 மாணவர்கள் குனியமுத்தூர் பகுதியில் அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ஷ்னேப் சாட் (Snapchat) சமூக வலைதளத்தில் கணக்கு வைத்திருக்கும் 17 வயது சிறுமியை தொடர்பு கொண்ட இளைஞர்கள் அவரை குனியமுத்தூர் அறைக்கு வரவழைத்துள்ளனர். பின்னர் 7 பேரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் உக்கடத்தை சேர்ந்த சிறுமி வீடு திரும்பாததால் அவரது பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில் , சிறுமி அவர் வீட்டிற்கு நேற்று திரும்பி வந்தார். சிறுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, குனியமுத்தூரில் கல்லூரி மாணவர்கள் தங்கும் அறையில் தங்கியதும், அங்கு சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதும் தெரியவந்த்து. இதனையடுத்து உக்கடம் போலீசார், கல்லூரி மாணவர்கள் 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிறுமியிடம் வேறு யாராவது அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கின்றனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போக்சோ வழக்கு என்பதால் காவல் துறையினர் கைதான மாணவர்களின் பெயர் விபரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.


