ரூ. 18.80 கோடியில் புதிய திட்ட பணிகள் தொடக்கம்!!

 
ttn

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் ரூ.18.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (16.12.2022) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 18 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள், விடுதிக் கட்டடங்கள். மண்டல இணை இயக்குநர் (பயிற்சி) அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

ttn

மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும், தங்களது சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளவும் இயலும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (Industrial Training Institutes) தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம், மாணவர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும். இத்தகைய தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட புதிய அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

govt

அந்த வகையில், ஈரோடு மாவட்டம். கோபிசெட்டிப்பாளையத்தில் 7 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவிலும், திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் 7 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவிலும், கட்டப்பட்டுள்ள புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள் மற்றும் விடுதிக் கட்டடங்கள்; தருமபுரியில் 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதிக் கட்டடம்; சென்னை, அம்பத்தூரில் 1 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான சென்னை மண்டல இணை இயக்குநர் (பயிற்சி) அலுவலகத்திற்கு புதிய கட்டடம்;என மொத்தம் 18 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.