பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து!
பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்கத்தில் கல்வி, வேலை, விவசாயம், மருத்துவம், வியாபாரம் என பல்வேறு தேவைகளுக்காக மாணவர்கள், அலுவலகம் செல்வோர், விவசாயிகள், நோயாளிகள் என நாள்தோறும் சுமார் 2லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் பல ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில் புத்தாண்டில் மாற்றம் செய்யப்பட்ட புதிய அட்டவணையில் கும்மிடிப்பூண்டி மார்கத்தில் மேலும் 2 புறநகர் ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்ததற்கு ரயில் பயணிகள் சங்கத்தினர் கடும் கண்டனத்தை பதிவு செய்து மீண்டும் ரயில்களை இயக்கிட வேண்டும் என வலியுறுத்தினர். ரயில் பயணிகள் தொடர் கோரிக்கையை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி - சென்னை மார்கத்தில் குறைக்கப்பட்ட ரயில்களில் மீண்டும் 2 ரயில் சேவை இம்மாதம் முதல் தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. பயணிகள் வசதிக்காக இன்று சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


