இலங்கை சிறையில் இருந்த 19 தமிழக மீனவர்கள் விடுதலை..

 
தமிழக மீனவர்கள்


எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்கள் 19 பேரை  விடுதலை செய்து  இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.  இவர்களில்  மார்ச் 29 ஆம் தேதி 4 மீனவர்களும், மார்ச் 31  ஆம் தேதி 3 மீனவர்களும் மற்றும் ஏப்ரல் 3 ஆம் தேதி 12 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.  இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்களும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

இலங்கை கடற்படை

கைது செய்யப்பட்ட  தமிழக மினவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது,   அவர்களை  ஏப்ரல்  12 ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க  ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது மீனவர்கள் ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டதற்கு, இலங்கை நீதிமன்றம் தலா ரூ. 1 கோடி செலுத்த வேண்டும் என கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு  தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  

யாழ்ப்பாணம் சிறைச்சாலை

  இதனையடுத்து இன்று 19 தமிழக மீனவர்களும் மீண்டும்  ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வழக்கை விசாரித்த  நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.  இதனையடுத்து  19 மீனவர்களும் இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.