+2 தேர்வு முடிவுகள் மே.8ம் தேதி வெளியாகும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..

 
 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  மே.8 ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி நிறைவடைந்தது.  தமிழ்நாடு மற்றும் புதுவையில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என   8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  தமிழகம் முழுவதும் சுமார்  79 மையங்களில் ,  ஏறத்தாழ 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் விடித்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நிறைவு

விடைத்தாள் திருத்துவது மற்றும் மதிப்பெண்களை பதிவேற்றம் பணிகள்  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  இந்நிலையில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்  மே 5-ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், நீட் தேர்வுக்கு பிறகு முடிவுகளை வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.   நீட் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு  ஓரிரு நாட்கள் முன்னதாக பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதால் முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  

 பள்ளிக் கல்வி இயக்ககம்

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், “பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். அதில், மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.  மேலும், உறுதிமொழி படிவத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது