விருதுநகரில் சோகம் : கேட் சரிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உயிரிழப்பு..!
சிவகாசி கொங்கலாபுரத்தைச் சேர்ந்த பெண் காவலர் ராஜேஸ்வரியின் மகள் கமலிகா (9) மற்றும் அவரது சகோதரி மகள் ரிஷிகா (4) ஆகிய இருவரும் வீட்டின் முன்புறம் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் கனமான இரும்பு கேட் திடீரென சரிந்து சிறுமிகள் மீது விழுந்தது. கேட்டின் பாரம் தாங்க முடியாமல் அடியில் சிக்கிக்கொண்ட சிறுமிகளை மீட்பதற்கு அந்த நேரத்தில் அருகில் யாரும் இல்லாததால், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் கண் இமைக்கும் நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பிஞ்சு உயிர்களைப் பறிகொடுத்த உறவினர்களின் கதறல் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.


