#JUST IN : சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

 
sivakasi sivakasi

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விளாம்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். தரைசக்கரம் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, திடீரென உராய்வு ஏற்பட்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீடீரென ஏற்பட்ட உராய்வில் ஒரு அரை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இந்த தீ விபத்தில் பணியாளர்கள் சிலர் மாட்டிக்கொண்டனர். இதில் கருப்பசாமி, தங்கவேல் ஆகிய 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் இந்த தீ விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த கருப்பம்மாள், மாரித்தாய் இருவருக்கும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து இடிபாடுகளை அகற்றினர். வெடி விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.