பசுமைத்தாயகம் நாளில் 2 லட்சம் மரக்கன்று நட வேண்டும் - ராமதாஸ்

 
PMK

பசுமைத்தாயகம் நாளில் 2 லட்சம் மரக்கன்று நட இப்போதிருந்தே அணியமாகுங்கள்! என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனித செயல்களில் மகத்தானது அறம். அனைத்து வகை அறங்களில் மகத்தானது மரம் வளர்க்கும்  அறம். அதனால் தான், ‘‘ மரம் வளர்க்கும் அறமே மாபெரும் அறம்’’ என்பதை நமது முழக்கமாக்கி  செயல்படுத்தி வருகிறோம். அத்தகைய அறம் செய்யும் வாய்ப்பை பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வழங்குவது குறித்து விளக்குவதற்காகவே இம்மடலை வரைகிறேன்.

PMK

பாட்டாளி மக்கள் கட்சியினரால் மறக்க முடியாத நாள்களில் பசுமைத் தாயகம் நாள் முதன்மையானது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25-ஆம் நாள் தான் பசுமைத்தாயகம் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும் நான் தொடங்கிய 34 அமைப்புகளில் எனது மனதுக்கு நெருக்கமான சிலவற்றில் பசுமைத்தாயகம் அமைப்பும் ஒன்று. பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அரசியலுக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் இயக்கங்களையும் விட, சமூகநீதிக்காக வன்னியர் சங்கத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட இயக்கங்களையும் விட, அரசு ஊழியர்கள் உள்ளிட்ட  உழைக்கும் மக்களுக்காக பாட்டாளி தொழிற்சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் ஆகியவற்றின் சார்பில்  நடத்தப்பட்ட போராட்டங்களையும் விட சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் காக்கவும்,  ஏரிகள், உள்ளிட்ட நீர்நிலைகளை மேம்படுத்தவும் பசுமைத்தாயகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் ஏராளம்.பவானி ஆற்றைக் காப்பதற்காக மேட்டுப்பாளையம் தொடங்கி ஈரோடு வரையிலும், தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுகளில் இருந்து பாலாற்றைக் காப்பதற்காக வாணியம்பாடி முதல் வாலாஜா வரையிலும் மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டது, ஜெயங்கொண்டம் பொன்னேரி, இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் ஏரி ஆகியவற்றை நானே முன்னின்று, பாட்டாளி இளைஞர்களுடன் இணைந்து  மண்ணை வெட்டி, எனது தலையில் சுமந்து கரையில் கொட்டி தூர்வாரியது, உலகம் முழுவதும் நடைபெற்ற சுற்றுச்சூழல் சார்ந்த மாநாடுகள் மற்றும் பயிலரங்குகளில் பசுமைத்தாயகம் அமைப்பின் பிரதிநிதிதிகளை பங்கேற்கச் செய்தது, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தியதன் மூலம் இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்தது என சுற்றுசூழலைக் காக்கவும், மனித உரிமைகளை பாதுகாக்கவும் நான் மேற்கொண்ட இயக்கங்கள்  அதிகம்.

pmk
இந்தப் பணிகள் அனைத்தையும் விட பசுமைத்தாயகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் நான் மிகவும் விரும்புவது சுற்றுச்சூழலைக் காப்பதற்காக மரக்கன்றுகளை நடுவதைத் தான். பசுமைத் தாயகம் சார்பில் இதுவரை 50 லட்சத்திற்கும் கூடுதலான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் புவி வெப்பயமாதலின் தீய விளைவுகள் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ள நிலையில், அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பசுமைத் தாயகம் நாளை நடப்பாண்டில் இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும். கடந்த ஆண்டுகளில் நடப்பட்டதை விட இந்த ஆண்டில் இன்னும் அதிக மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்பது தான் எனது ஆசையாகும். தமிழ்நாடு முழுவதும் குறைந்தது 2 லட்சம் மரக்கன்றுகளாவது நடப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

அண்மைக்காலங்களில் எனக்கு மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிக்கும் செயல் ஒன்று உண்டென்றால், அது பிறந்தநாள் மற்றும் திருமண நாளையொட்டி பாட்டாளி சொந்தங்கள் மரக்கன்று நட்டு, அதற்கான  நிழற்படங்களை எனக்கு அனுப்புவதும், அதைத் தொடர்ந்து அவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு நான் தொலைபேசியில் வாழ்த்து சொல்வதும் தான். 2021&ஆம் ஆண்டு நவம்பர் 30&ஆம் நாள் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின்படி ஏப்ரல் 7&ஆம் நாள் வரை மொத்தம் 443நாட்களில் 3283 பேர் தங்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாளுக்காக 28 ஆயிரத்து 006 மரக்கன்றுகளை நட்டிருக்கின்றனர். அவர்கள் தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்னை மகிழ்வித்து வருகின்றனர். பா.ம.க.வினர் அனைவரும் இணைந்து 2 லட்சம் மரக்கன்றுகள் நடும்போது கூடுதலாக மகிழ்ச்சியடைவேன்.

pmk

பசுமைத் தாயகம் நாளுக்கு இன்னும் 78 நாட்கள் உள்ளன. பா.ம.க.வினர் 10 பேர் இணைந்து ஒரு  மரக்கன்று நட்டு வளர்த்தாலும் கூட ஒரு வாரத்தில் 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு விட முடியும். ஆனால், அவை எங்கு நடப்படும், எவ்வாறு நடப்படும், எவ்வளவு காலம் பராமரிக்கப்படும்? என்பதற்கு எந்தவகையான உறுதியும் கிடையாது. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், நடப்படும் மரக்கன்றுகள் அனைத்தும் அடுத்த பத்தாண்டுகளில் அவற்றுக்குரிய பயனை வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனால் தான் நடப்பாண்டில் மரக்கன்று நடுவதற்கான இலக்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மரக்கன்றுகளை நடும் பணிகளை பசுமைத்தாயகம் அமைப்பு ஒருங்கிணைக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஒன்றியம், நகரம், பேரூர், சிற்றூர்களில் எவ்வளவு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்பதும், ஒவ்வொரு ஊரிலும் அவை எங்கெங்கு நடப்பட வேண்டும் என்பதும் முன்கூட்டியே திட்டமிடப்பட வேண்டும். மரக்கன்றுகள் நடப்பட்ட பிறகு அவற்றை யார், யார் பராமரிப்பது என்பதும் தீர்மானிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட வேண்டும். நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை, அவற்றின் வகைகள், நடப்பட்ட ஊர்கள், அவற்றை பராமரிப்பவர்களின் பெயர், விவரம், முகவரி ஆகியவை பதிவு செய்து  மாவட்ட வாரியாக ஆவணம் ஆக்கப்பட்டு கட்சித் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

பசுமைத்தாயகம் நாளில் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகளை வனத்துறையிடம் விண்ணப்பித்து  பெற்றுக் கொள்ளலாம். அதற்கு வாய்ப்பில்லாத இடங்களில் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.  ஒவ்வொரு ஊரிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக நடப்பட வேண்டுமே தவிர, குறைவாக நடப்படக்கூடாது. எனவே, பசுமைத்தாயகம் நாளில் மண்ணுக்கு மரக்கன்றுகளை பரிசளிப்பதற்கான பணிகளை இப்போதிலிருந்தே தொடங்கும்படி பாட்டாளி சொந்தங்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.