தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி பாளையஞ் செட்டிகுளத்தைச் சேர்ந்த தம்பதி சுரேஷ் - அர்ச்சனா. இவர்களுக்கு சஞ்சனாஶ்ரீ(2), என்ற மகள், 3 மாத ஆண் குழந்தையும் உண்டு. ஆலங்குளத்தை அடுத்த ராம்நகரில் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சுரேஷ் குடும்பத்துடன் சென்றிருந்தார். அங்கு குழந்தை சஞ்சனா ஸ்ரீ வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணவில்லை. அக்கம் பக்கம் தேடிய போது, வீட்டுக்கு வெளியே பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில் குழந்தை தலைகீழாக கவிழந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. குழந்தையை மீட்ட உறவினர்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது, அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸார் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


