பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுமி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு
மறைமலை நகரில் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுமிக்கு மின்சாரத் தாக்கிய நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் ஒரு சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் பூங்காவில் அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்கிற இரண்டு வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பூங்காவில் உள்ள மின்கம்பங்களில் இருந்து மின்சாரம் தாக்கியது அப்போது குழந்தை தூக்கி வீசப்பட்டது. உடனடியாக அக்கப் பக்கத்தினர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மறைமலைநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் தற்பொழுது மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது இந்த பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டு காவல்துறையினர் மற்றும் மின்சார துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பூங்காவில் உள்ள அனைத்து மின் கம்பங்களிலும் உபகரணங்கள் உடைந்த நிலையில் காட்சியளிக்கிறது உடனடியாக அனைத்து கம்பங்களையும் சரி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.


