விலைவாசி உயர்வு... ஹோட்டல்களில் 20% விலை உயர்வு என தகவல்!!

 
food

வணிகப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை இம்மாதம் தொடக்கத்தில் ரூபாய் 268 உயர்ந்தது.  இதனால் சிலிண்டரின் விலை ரூபாய் 2406 ஆக அதிகரித்துள்ளது.  சிலிண்டர் விலை அதிகரிப்பு , அத்தியாவசிய பொருட்களின் உயர்வு காரணமாக ஹோட்டல்களில் விற்கப்படும் பண்டங்களின் விலையும் டீ, காபி போன்றவற்றின் விலையும் தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.  குறிப்பாக தேனீர் கடைகளில் டீ  இரண்டு ரூபாயும்,  காபி  3 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

amma hotel

இந்த சூழலில் உணவு பண்டங்களின் விலை 20 சதவீதம் உயர்த்த ஓட்டல் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். எரிவாயு விலையை கடுமையாக உயர்த்தி இருப்பதை கருத்தில் கொண்டும்,  சமையல் எண்ணெய் , அரிசி , பருப்பு உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை அனைத்தும் உயர்ந்து விட்டதன் காரணமாகவும் , உணவுப் பண்டங்கள் தயாரிக்க 16 முதல் 20 சதவீதம் செலவினம் அதிகமாக ஆகிறது . இதனால் உணவு பண்டங்களின் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழி இல்லை என்று சென்னை ஓட்டல்கள் சங்க செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

food

இதுகுறித்து ஓட்டல் அதிபர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில்  தின்பண்டங்கள் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும்,  16 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்றும் இது படிப்படியாக சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

 processed food

இதனிடையே சென்னை உணவக சங்க செயலாளர்  வெளியிட்ட அறிவிப்பின் படி,  சென்னையில்  மொத்தம் உள்ள 15000 உணவகங்களில் உணவிற்கு பயன்படுத்தும் மூலப்பொருட்கள், செலவினங்கள், வாடகைக்கு ஏற்ப உணவின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் நடுத்தர உணவகங்களில் ரூ 30க்கு விற்ற இட்லி,  தோசை, பூரி போன்ற டிபன் வகைகள் அனைத்தும் ரூ5 வரை உயர்த்தப்படும். சாப்பாடு,பிரியாணி போன்ற வகைகள் ரூ 20 வரை உயர்த்தப்படலாம் என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.