23 வயது இளைஞருக்கு மாரடைப்பு! பைக்கின் மீது சாய்ந்தபடி உயிரிழப்பு

 
ச் ச்

திருப்பூரில் 23 வயது வாலிபர் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தனது பைக்கின் மீது சாய்ந்தபடி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து திருமுருகன்பூண்டி விஜிவி கார்டன் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரது மகன் நவீன் குமார் (23) கபடி வீரர் ஆவார். நவீன் குமார் பெரியாயிபாளையத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனியில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடிந்து அலுவலகத்திற்கு வெளியே தனது வாகனத்தில் வீட்டுக்கு செல்ல தயாராக இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியில் தலை சுற்றல் ஏற்பட்டு சில நொடிகளிலேயே இருசக்கர வாகனத்தின் மேல் சாய்ந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கீழே விழுந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் நவீன் குமாரை மீட்டு திருமுருகன்பூண்டி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முதலுதவி அளித்து அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவிநாசி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் நவீன்குமாரை பரிசோதித்ததில் ஏற்கனவே அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்று கூறினர்.  இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது. உடனடியாக சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நவீன்குமார் அலுவலக வாயிலில் ஹார்ட் அட்டாக் சமயத்தில் கீழே விழுந்து இறப்பது அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.  தற்பொழுது அந்த காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.