பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு!

 
Bomman Pelli

பொம்மன் - பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளதை அடுத்து அவர்களுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழகத்திற்கு  வருகை தருகிறார். சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.  அதன் பிறகு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையும் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இது இந்தியாவின் 11வது வந்தே பாரத் ரயில் சேவையாகும்.  தொடர்ந்து  விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு,  பல்லாவரத்தில் இருக்கக்கூடிய மைதானத்தில்,   ரூ.294 கோடி மதிப்பிலான 3 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையில் 37 கிலோ மீட்டர் தூர அகல ரெயில் பாதை,  தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் விரைவு ரெயில் சேவை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.   

modi


 
சென்னை பயணத்தை முடித்து கொண்டு  நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகிற 9-ந் தேதி பிரதமர் மோடி செல்கிறார். அங்கு யானைகள் பராமரிக்கும் முறைகள், அதற்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். பின்னர் பாகன்களிடம் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து ஆஸ்கார் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவண படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை சந்தித்து பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறார். மேலும் படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி குட்டி யானைகளை பார்வையிடுகிறார். பின்னர் முதுமலை வனத்தில் புலிகளின் பாதுகாப்பு மற்றும் எண்ணிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். பிரதமர் வருகையையொட்டி முதுமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்திக்க பிரதமர் மோடி 9-ந் தேதி தெப்பக்காடு வருகிறார். இதன் காரணமாக பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்திக்க வரும் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.