கள்ளச்சாராய பலி எதிரொலி- புதுச்சேரியில் 24 மணிநேரமும் சோதனை நடத்த உத்தரவு
மரக்காணம் கள்ளசாராயம் பலி எதிரொலியாக கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கவும், அனைத்து மதுபான விற்பனைக் கடைகளிலும் சோதனை நடத்தவும் கலால் துறை மூலம் 24 மணி நேரமும் தீவிர சோதனை ரெய்டு நடத்த வேண்டும் என்றும் புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி காவல்துறை மற்றும் கலால்த்துறை உள்ளிட்ட துறைகளுக்கு ஆட்சிர் வல்லவன் பிறப்பித்துள்ள உத்தரவில், “புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டத்தில் கள்ள மதுபானம் அருந்தும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கள்ள மது அருந்திய இரண்டு சம்பவங்களில், ஏறக்குறைய 42 பேர் ஜிப்மர், பிம்ஸ், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி உட்பட பல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். போலி மது விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க தமிழக போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர், புதுச்சேரி மாவட்டத்துக்கு தப்பிச் சென்று, மேலும், இதுபோன்ற கள்ள சாராயம் புதுச்சேரி மாவட்டத்திற்குள் ஊடுருவ வாய்ப்புள்ளது.
எனவே, கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கவும், அனைத்து மதுபான விற்பனைக் கடைகளிலும் சோதனை நடத்தவும் கலால் துறை மூலம் 24 மணி நேரமும் தீவிர சோதனை.ரெய்டு நடத்தப்படும். மேலும், அப்பகுதியில் மதுவின் நடமாட்டம்/விற்பனை/சேமிப்பு ஆகியவையும் கண்காணிக்கப்படும். தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறையானது, கள்ள மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருளை (மெத்தனால்) கையாளும் தொழில்துறை அலகுகளின் இருப்பை ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும். காவல் துறையினர் எல்லைப் பகுதியில் சோதனையை தீவிரப்படுத்தி, கொள்ளையர்கள் மீது கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.