விஏஓ மரணம்- மாற்று சாதி இளைஞரை காதலித்ததால் பெற்றோர் விஷம் கொடுத்ததாக புகார்
பொன்னேரி அருகே குடும்ப தகராறு காரணமாக பெண் விஏஓ விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், மாற்று சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் காதலை ஏற்கவில்லை என காதலன் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்த அருணா (27). இவர் பொன்னேரி வருவாய் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 29ஆம் தேதி குடும்ப தகராறு காரணமாக பெண் விஏஓ அருணா விஷமருந்தி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அருணா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே திடீர் திருப்பமாக அருணாவுடன் பணியாற்றி வரும் சக விஏஓ சிவபாரதி திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக விஏஓவாக பணியாற்றி வருவதாகவும், அருணாவும் தானும் காதலித்து வந்ததாகவும், மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அருணாவின் குடும்பத்தினர் தங்களது காதலை ஏற்கவில்லை எனவும், தன்மையும், அருணாவை மிரட்டிய அருணாவின் குடும்பத்தார், வற்புறுத்தி அருணாவிற்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் விஏஓ தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அவரை விஷம் கொடுத்து கொன்று விட்டதாக காதலன் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


