தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு காரில் ரேஷன்அரிசி கடத்திய 2 பேர் கைது... 950 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

 
ration rice

தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற  பெங்களூரை சேர்ந்த 2 பேரை கைது செய்த குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு துறையினர், அவர்களிடம் இருந்து 950 கிலோ அரிசி, 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து சமீபகாலமாக வெளி மாநிலங்களுக்கு குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார், பல்வேறு பகுதியில் ஆங்காங்கே தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தாளவாடியில் இருந்து பெங்களூருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, மாவட்ட குடிமை பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்துக்கு தகவல் கிடைத்தது.

arrest

இதன் பேரில்,  ஈரோடு மாவட்டம் தாளவாடி கொங்கள்ளி ரோட்டில்  போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக  காரை நிறுத்தி சோதனை செய்ததில் 450 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, காரை ஓட்டிவந்த பெங்களூர் காட்டன் பெட், சுப்பண்ணாசேரி லைன் பகுதியை சேர்ந்த ராகவேந்திரா (28) என்பவர், தாளவாடியில் இருந்து  பெங்களூருக்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காக  ரேசன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதைடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த  450 கிலோ ரேஷன் அரிசி, காரை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார், தாளவாடி எல்லகட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக காரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் காரில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. விசாரணையில் பெங்களூரு எஸ்வந்த்பூர், சுபேதர் பாளையா பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் ஜெய்சங்கர் (52), தாளவாடியில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி பெங்களூரில் கூடுதல் விலைக்கு விற்க சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ஜெய்சங்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 500 கிலோ ரேஷன் அரிசி, ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் ஒரே நாளில் 950 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.