சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 30க்கும் மேற்பட்டோர் காயம்

 
Accident

விழுப்புரம் அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து நெய்வேலி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துடர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த பேருந்து விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென குறுக்கே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை ஒருபக்கமாக திருப்பிய நிலையில் அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த மக்கள் அதிர்ச்சி அடைந்த அபாய குரல் எழுப்பினர். 

இதனையடுத்து சப்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள் பேருந்துக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு உடனடியாக வெளியே கொண்டுவந்தனர்.  இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.