கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து - தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு

 
train accident

ஒடிசா மாநிலத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் தமிழர்கள் 35 பேர் உயிரிழந்துள்ளதாக  தமிழக வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் கூறியுள்ளார்

ஒடிசா மாநிலம் பாலசோரில் நேற்று மாலை 7 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது.   10 முதல் 12 பெட்டிகள் தரம் புரண்டதால் எதிர் தண்டவாளத்தில் விழுந்தன அதைத் தொடர்ந்து பெங்களூரு ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. இந்த ரயிலில் இருந்த நான்கு பெட்டிகளும் தடம் புரண்டன.  இதைத்தொடர்ந்து தடம் புரண்ட பெட்டிகள் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சூழலில் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனுடன் காணொளி வாயிலாக கள நிலவரம் குறித்து அவர் உரையாடினார்.   

இந்த கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலியாகியுள்ளதாக தமிழக வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் கூறியுள்ளார். தமிழர்கள் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் ஒடிசாவுக்கு செல்கின்றனர். ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  இருந்து இன்று மாலை 6.30 மணியளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் திரும்பி சென்னை வருவதற்கும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.