சூடானில் இருந்து முதற்கட்டமாக 360 இந்தியர்கள் மீட்பு.. 9 தமிழர்களும் தாயகம் திரும்பினர்..

 
சூடானில் இருந்து முதற்கட்டமாக 360 இந்தியர்கள் மீட்பு..  9 தமிழர்களும் தாயகம் திரும்பினர்..

சூடானில் உள்நாட்டுப்போரில் சிக்கிய 9 தமிழர்கள் உள்பட 360 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.  

சூடான் நாட்டில் அந்த நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கும் இடையே  மோதல் போக்கு நிலவி வருகிறது.  இதனால் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.  இந்நிலையில் அங்கு வெளிநாட்டினர்கள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ஏதுவாக,  இரு தரப்பினரும்  72 மணிநேர போர் நிறுத்த ஒப்பந்ததிற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.  இதனையடுத்து  அங்கு சிக்கியுள்ள சுமார் 400 இந்தியர்களை வெளியேற்றுவதற்காக ‘ஆபரேஷன் காவேரி’ என்னும்   மீட்புப் பணியை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. அதன்படி முதற்கட்டமாக 551 பேர் மீட்கப்பட்டனர்.  

sudan

பின்னர்  அவர்கள் அனைவரும் சூடான்  துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மற்றும் விமானம் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில்  360 இந்தியார்களை மற்றும் ஏற்றிக்கொண்டு  ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து   தனி விமானம் நேற்று இரவு 9.30 மணி அளவில் டெல்லியை வந்தடைந்தது. முதற்கட்டமாக அழைத்து வரப்பட்ட 360 இந்தியர்களில் 9 தமிழர்கள் ஆவர்.  அவர்களில்  5 பேர் இன்று காலை சென்னை வந்தடைந்தனர்.  மீதமுள்ள 4 பேர் நேரடியாக மதுரைக்குச் சென்றுவிட்டனர்.  தாயகம் திரும்பிய அவர்களை  தமிழ்நாடு அரசு அதிகாரிகள்  வரவேற்றனர்.  சூடானில் இருந்து மீட்கப்பட்டுள்ள தமிழர்களை அழைத்து வரும் செலவை தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

சூடான் ராணுவப்படையினர் இடையே மோதல்

மேலும் சூடானில் இருந்து தொடர்ந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு வருவதாகவும், அவர்களில்  12 தமிழர்கள் மும்பையில் இருந்து சென்னை வருவதாகவும் கூறப்படுகிறது.  2 வாரங்களில் தங்களது நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாக, நாடு திரும்பியவர்கள்   போர் முனையில் நடந்த திகில் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.  சிலர் துப்பாக்கி முனையில் தங்களிடம் இருந்த அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாகவும்,  பல மணி நேரம் பிணை கைதிகளாக பிடித்து வைத்து இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.  3 நாட்கள் வரை சாப்பிட உணவு இல்லாமல் பரிதவித்ததாகவும்,  செல்போன்கள் கொள்ளையடித்துச் சென்றதால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் நிர்கதியாக தவித்ததாகவும் தெரிவித்தனர்.