சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 379 சாலைகள் மேம்படுத்தப்படும் - மாநகராட்சி அறிவிப்பு

 
Chennai Roads

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக ரூ.45.19 கோடி மதிப்பீட்டில் 233 உட்புற தார் சாலைகள், 34 பேருந்து தார் சாலைகள் என மொத்தம் 379 சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியால் பராமரிக்கப்படும் சாலைகளில் தொடர் பயன்பாட்டின் காரணமாகவும், பருவ மழையின் காரணமாகவும் ஒரு சில சாலைகளில் பள்ளங்களும், குழிகளும் ஏற்பட்டுள்ளன. பருவமழையின் காரணமாக, மாநகராட்சியின் சார்பில் இந்தச் சாலைகளில் ஜல்லிக்கலவை, தார்க்கலவை மற்றும் குளிர் தார்க்கலவை கொண்டு பள்ளங்களும், குழிகளும் தற்காலிகமாக சீர்செய்யப்பட்டன. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பருவமழை முடிவடைந்தவுடன் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீர்செய்யப்படும் என அறிவித்திருந்தார். மேலும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது, சென்னையில் சிங்கார சென்னை 2.0, தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்படும் என அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, மேயரின் ஆலோசனையின்படி, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக ரூ.45.19 கோடி மதிப்பீட்டில் 233 உட்புற தார் சாலைகள், 34 பேருந்து தார் சாலைகள், 63 உட்புற சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், 2 சிமெண்ட் கான்கிரீட் பேருந்து சாலைகள், 47 இன்டர்லாக் பேவர் பிளாக் சாலைகள் என 379 சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.